week-8

உங்களது குழந்தை இப்பொழுது ஏறத்தாழ ஒரு அங்குல நீளமுடையதாக இருக்கும். அது மிகக் குறுகியதாக இருப்பினும் அதனது பிரதான உறுப்புகள் பலவும் உருவாகியிருக்கும். கண்கள், நாக்கு, வாய், இதயம், நுரையீரல், ஈரல் மற்றும் குடல்கள் தெளிவாக விருத்தியாகியிருக்கும். இதைப்போலவே குழந்தையின் விரல்களும் கால்விரல்களும் விருத்தியடைந்திருக்கும். இந்நிலையில் மூளையும் நரம்புத் தொகுதியும் பெருமளவு உருவாகியிருக்கும்.

 

அருவருப்பும் குமட்டலும் சேர்ந்த அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டிருப்பின் இப்போது அது அதிகரிக்கக்கூடும். எப்படியாயினும் இதற்காகப் பயப்படவேண்டாம். இவை இன்னும் மூன்று அல்லது நான்கு வார காலத்திற்கு மாத்திரமே நீடிக்கும். ஏற்படுகின்ற அருவருப்பு உணர்வுகளை மறந்து உங்களது மனத்தினை பிறநடவடிக்கைகளில் ஈடுபடச் செய்யுங்கள்.

 

குமட்டல் காரணமாக வழக்கத்தைவிட குறைந்தளவே உணவருந்துகிறீர்கள் என்பது வெளிப்படையாயினும், உங்களது குழந்தைக்குத் தேவையான ஊட்டம் உங்களது உடலினுள்ளே சேமிக்கப்பட்டு உள்ளதனால் உங்களது குழந்தை இச்சேமிப்புகளிலிருந்து ஊட்டங்களைப் பெற்றுக்கொள்ளும். எனவே நீங்கள் அதிக கவலை கொள்ள வேண்டாம். நீங்கள் விரும்புகின்ற உணவுகளைச் சிறிய அளவுகளில் தொடர்ந்து உட்கொள்ளவும். எப்படியாயினும் அளவுக்கதிகமான குமட்டல் ஏற்பட்டு உட்கொண்ட உணவுகள் அதிகளவு வெளியேறுகின்றதாயின் நீர்வற்றிப்போகும் தன்மை உங்களுக்கு ஏற்படலாம். எனவே இப்படியான வேளைகளில் உடனடியாக மருத்துவ உதவியினை நாடவும். உங்களது வீட்டிலுள்ள யன்னல்கள் கதவுகளை திறந்து வைத்து எப்போதும் வீட்டினுள்ளே போதுமானளவு காற்றோட்டமும் வெளிச்சமும் உள்ளதனை உறுதிசெய்து கொள்ளவும்.

 

மருத்துவப் பரிசோதனைக் கிளினிக்குகளில் உங்களது நிறையினை அவர்கள் கணித்திருக்கலாம். உங்களது நிறை முன்புபோல் அதேயளவில் உள்ளதா? கவலை கொள்ளவேண்டாம். கருவுற்றிருக்கும்போது முதல் மூன்று மாத காலத்திற்கு எடை அதிகரிக்காதிருப்பது வழமையான அனுபவமே. எடையானது குறைந்திருப்பதை நீங்கள் அனுபவிக்கக்கூடும். இதுவும் பயப்படக்கூடிய விடயம் அல்ல. நியம குருதிப் பரிசோதனைகளை அவர்கள் மேற்கொண்டிருக்கக்கூடும் இல்லையா? இத்தகைய குருதிப் பரிசோதனைகள் பற்றி இந்த இணைப்பில் மேலும் அறிந்துகொள்ளலாம்.