week-7

உங்களது குழந்தை இப்பொழுது அரை அங்குல நீளமானதாக இருக்கும். அதனது காதுகள், கண்கள், வாய், கைகள் மற்றும் பாதங்கள் தெளிவாக விருத்தியடைவதற்கு ஆரம்பித்திருக்கும். தாயின் கருவறையின் உள்ளே குழந்தையின் மூளை விருத்ியடையத் தொடங்குகிறது என்பதனை நீங்கள் ஏற்கெனவே அறிந்திருக்கக்கூடும். இப்பொழுது உங்களது குழந்தையின் மூளையும் அத்துடன் நரம்புத் தொகுதியும் விருத்தியடைய ஆரம்பித்திருக்கும். இவ்விருத்திகளுக்கு உதவுவதற்குத் தேவையான போலிக்கமிலத்தினை அவசியமான அளவுகளில் ஏற்கெனவே உட்கொள்ள ஆரம்பித்திருப்பீர்கள். சமபோசாக்குள்ள மற்றும்  ஆரோக்கியமான உணவினை நீங்கள் உட்கொண்டு வருவீர்களாயின் உங்களது குழந்தையானது நன்றாக வளர்வதற்குத் தேவையான பலவித உயிர்ச்சத்துக்களையும் தாதுப்புக்களையும் உங்களது குருதியிலிருந்து இயற்கையாகவே உறுஞ்சிக்கொள்ளும். போலிக்கமிலம் ஒன்றே நீங்கள் மேலதிக மாற்றீடாக உண்ணவேண்டியது என்பதுடன் உங்களுக்கு விசேட பால்மா வகைகளும் மேலதிக வைட்டமின்களும் தேவையற்றவையாகும்

பசியற்ற நிலையினையும் அருவருப்பினையும் இப்போதும்கூட நீங்கள் உணரக்கூடும். இது வழமையானதே. நீங்கள் விரும்பும் உணவுகளை சிறிய அளவில் சிறுசிறு இடைவெளிவிட்டு அடிக்கடி உட்கொள்வதே இங்கு முக்கியமாகும். பசியற்ற நிலை மற்றும் அருவருப்புத் தன்மை ஆகிய அனுபவங்கள் பெண்களிற் சிலருக்கு மாத்திரமே ஏற்படும். இவ்வகையான அறிகுறிகளது அனுபவம் உங்களுக்கு ஏற்படவில்லையாயின் கவலைப்படவேண்டாம். இதுவும் வழமையானதே.

உங்களது குழந்தை வளர்ச்சியுறும்போது உங்களது கருவறையும் விரிவடைய ஆரம்பித்துள்ளது. இது நடைபெறும்போது கருவறைக்கு அண்மையிலுள்ள சிறுநீர்ப்பையானது விரிவடைகின்ற கருவறையினால் நசுக்கப்படக்கூடும். எனவே அடிக்கடி சிறுநீர் கழிக்கவேண்டிய அனுபவம் ஏற்படலாம். இது வழமையானதே. ஆயினும் சிறுநீர் கழிக்கும்போது வலி அல்லது அசௌகரியம் எதாவது ஏற்படின் உடனடியாக மருத்துவரை நாடவும்.

இவ்வேளையில் உங்களது உடலினுள் ஓமோன் சுரப்புகளினால் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக மலச்சிக்கல் உண்டாகியிருக்கும் அனுபவம் உங்களுக்கு ஏற்படலாம். எதுவித மருத்துவமும் இதற்குத் தேவையாகாது. மலச்சிக்கலைத் தவிர்ப்பதற்கு அதிகளவு நீரைப் பருகுவதுடன் அதிகளவு பழங்களையும் இலைக்கீரை வகைகளையும் உண்ணவும்.

வயிற்றில் கடுமையான தசைப்பிடிப்பு, சடுதியான குருதிவெளியேற்றம், கடுமையான வயிற்றுநோவு அல்லது மயக்கமடையும் தன்மை காணப்படின் இது வழமையான ஒன்றல்ல. எனவே உடனடியாக நீங்கள் மருத்துவரை நாடவேண்டும். இதுவரை உங்களது உள்ளுர் மகப்பேற்றுக் கிளினிக்குடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளவில்லையாயின் உடனடியாக நீங்கள் அதனுடன் தொடர்பேற்படுத்திக் கொள்ளவும். உங்களது உடல் ஆரோக்கியத்தினைப் பரிசோதிப்பதற்கு உங்களது பொதுச் சௌக்கிய மாது நிச்சயமாக இப்பொழுது உங்களை நாடியிருப்பார்.

error: Content Protected © mummypages.lk