week-36

நீங்கள் இப்பொழுது கருவுற்றிருப்பதன் 36வது வாரத்தில் அல்லது 9வது மாத்தில் உள்ளீர்கள். இது ஒரு நீண்ட பயணமாயினும் மகிழ்ச்சியான முடிவு மிக அண்மையில் உள்ளது. உங்கள் குழந்தையானது இப்பொழுது பிறக்க வேண்டிய நிலையில் உள்ளதுடன் பிறப்பதற்குப் பொறுமையற்ற நிலையில் உள்ளதால் அது உருண்டு திரும்புவதற்கு இனிமேல் நேரம் கிடையாது. உங்கள் குழந்தை அதன் தலை முதலில் வெளியே வரக்கூடியதாகப் பிறக்குமா அல்லது அடிப்பாகம் (அடிப்பாகம் அல்லது கால்கள்) முதலில் வெளியே வரக்கூடியதாக பிறக்குமா என்பதைப்பற்றி உங்களது மருத்துவரினால் அல்லது மருத்துவமாதுவினால் இப்போது கூறக்கூடியதாக இருக்கும். உங்களது குழந்தை அதனது அடிப்பாகம் முதலில் வெளியே வரக்கூடியதாக பிறக்குமாயின் குழந்தை வெளியேறுதல் மற்றும் பிறப்பித்தற்கான விசேட தயார்நிலைகள் பற்றி உங்கள் மருத்துவர் உங்களுடன் கலந்துரையாடுவார். கருவுற்றிருக்கும் 36வது வாரத்தில் அடிப்பாகம் முதலில் வெளியே வரக்கூடியதாக பிறக்கும் நிலையில் உள்ள அநேகமான குழந்தைகள் சிசேரியன் என்னும் முறையினாற் பிறப்பிக்கப்படுகின்றன. தாயாரினதும் குழந்தையினதும் ஆரோக்கியத்தினைப் பொறுத்து சாதாரண பிறப்பித்தல் நிகழலாம். ஆனாலும் அடிப்பாகம் முதலில் வெளியேறக்கூடியதாக பிறக்கும் குழந்தைகளுக்குச் சாதாரண பிறப்பித்தல் ஏற்படும்போது சில அபாயங்கள் உண்டு. குழந்தையை சாதாரண நிலையிற் பிரசவிப்பதற்கு நீங்கள் தீர்மானித்த பின்னர் உங்களது மருத்துவர் இத்தகைய அபாயங்கள் பற்றி உங்களுடன் கலந்துரையாடுவார்.

உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு அல்லது வேறேதும் விசேட ஆரோக்கிய நிலைகள் உள்ளதாயின், இவ்வேளையில் நீங்கள் மேலதிக விசேட கவனம் செலுத்தவேண்டும். உங்களது மருத்துவராலும் மருத்துவ மாதுவினாலும் வழங்கப்படுகின்ற ஆலோசனைகளைப் பின்பற்றுவதை உறுதிசெய்து கொள்வதுடன் அவர்கள் கூறும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். கருவுற்றிருக்கும் இறுதிக்கால கட்டத்தில் நீங்கள் உள்ளதோடு, இவ்வளவு நீண்ட தூரம் கடந்து வந்துள்ளீர்கள். எனவே உங்களது குழந்தையைப் பிரசவிக்கும்போதும் பிரசவித்த பின்பும் உங்கள் குழந்தையும் நீங்களும் மிகவும் அனுகூலமான ஆரோக்கிய நிலையில் இருக்கவேண்டும் என்பதை உறுதிசெய்ய விரும்புகிறீர்கள். இவ்வேளையில் உங்களது குழந்தையின் வளர்ச்சி நெருக்கமாக அவதானிக்கப்படும். உங்களது மருத்துவரும் இதனை வாரந்தோறும் அவதானிப்பதுடன் உங்களது குழந்தையின் வளர்ச்சி வீதம் குன்றியிருப்பின் அதற்காக விசேட கவனம் செலுத்தப்படவேண்டும். இவ்வித அனுபவம் உங்களுக்கு ஏற்படுமாயின் யாது செய்யவேண்டும் என்பது பற்றி உங்களது மருத்துவர் ஆலோசனை வழங்குவார்.

கருவுற்றிருக்கும் கடைசி வாரங்களின்போது உங்களது குழந்தையின் அசைவுகளை அவதானிக்க வேண்டியதின் முக்கியத்துவத்தினைப்பற்றி நாம் ஏற்கெனவே உங்களிடம் கூறியுள்ளோம். உங்களது குழந்தை எத்தனை தடவை அசைகிறது என்பதையிட்டு நீங்கள் மேலதிக கவனம் செலுத்துவதுடன் 4 மணித்தியாலங்களுக்கு மேலாக எதுவித அசைவையும் நீங்கள் உணராவிடின் மருத்துவ உதவியை உடன் நாடவேண்டும். நீங்கள் குழந்தையை எங்கு பிரசவிக்கவேண்டுமென ஏற்கெனவே தீர்மானித்திருப்பதுடன் மருத்துவ மனையினையும் தெரிவுசெய்திருப்பீர்கள். குழந்தையைப் பிரசவிப்பதற்கு மருத்துவமனையினை எவ்வாறு சென்றடைவது எனவும் குழந்தை பிறக்கும்போது யார் உங்களுடன் கூட இருப்பது எனவும் தீர்மானித்திருப்பீர்கள். மருத்துவ மனையில் நீங்கள் குழந்தையைப் பிரசவிக்கும்போதும் குழந்தை பிறந்தபின்பும் உங்களுக்குத் தேவைப்படும் அத்தியாவசியமான பொருட்களைச் சிறியதொரு பையிலிட்டு வைத்திருப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். புதிதாகப் பிறந்த குழந்தைக்கு அது பிறந்த ஒருசில மணித்தியாலங்களின்போது அதற்குத் தேவையான பொருட்களையும் உள்ளடக்க மறக்கவேண்டாம். நீங்கள் பையில் இட்டுப் பொதிசெய்து கொள்ளவேண்டிய பொருட்களைப்பற்றி மேலும் அறிந்துகொள்ள இவ்விணைப்பினை நாடவும். உங்களது மருத்துவ மாதுவிடமும் நீங்கள் ஆலோசனை கேட்கலாம்.

36 வாரங்களின் பின்னர் உங்களது குழந்தையின் தலை இடுப்பெலும்புக் கால்வாயினுள் பிரவேசிக்க வேண்டும் என்பதனை நீங்கள் நூல்களில் படித்திருக்கக்கூடும். எவ்வாறாயினும் இது எப்போதும் நடைபெறுவதில்லை அதுவும் விசேடமாக இது உங்களது முதற் குழந்தையாயின். பிரசவிக்கும்போது சிலவேளைகளில் உங்களது குழந்தையின் தலை மாத்திரம் இடுப்பெலும்புக் கால்வாயினுள் புகுவதற்கு ஆரம்பிக்கும். உங்களது குழந்தையின் தலை இன்னமும் இடுப்பெலும்புக் கால்வாயினுள் பிரவேசிக்கவில்லையென உங்கள் மருத்துவர் அல்லது மருத்துவ மாதுவிடமிருந்து அறியநேரிட்டால் அதற்காக அதிகம் பயப்படவேண்டாம்.

உங்களது மூட்டுக்களை தளர்த்தி பிரசவத்திற்கு ஆயத்தமாக நெகிழ்வாக்குவதற்கு உங்களது உடலானது இக்காலகட்டத்தில் ஓமொன்களைச் சுரக்க ஆரம்பிக்கிறது. இதன்விளைவாக உங்களது உடலிலும் மூட்டுக்களிலும் வலியினை நீங்கள் அனுபவிக்கக்கூடும். இடுப்பெலும்புப் பகுதியில் உள்ள மூட்டுக்கள் தளர்ச்சியடையும் காரணத்தால் நீங்கள் எழுந்துநிற்பதற்கு, சரிந்து படுப்பதற்கு, இருப்பதற்கு அல்லது இருக்கும் நிலையிலிருந்து எழுதற்கு முயற்சிக்கும்போது வலியுண்டாகலாம். கருவுற்றிருக்கும் இக்கால கட்டத்தில் இது வழக்கமானது.

36 வாரங்களின் பின்பு உங்களது மருத்துவர் அல்லது மருத்துவ மாது வாரந்தோறும் உங்களைப் பரீட்சிப்பர். உங்களது குழந்தையின் அசைவுகளைப்பற்றி உங்களிடம் கேட்டறிவர், எனவே இவற்றை நீங்கள் குறித்து வைத்திருப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.