week-25

week-26

week-27

25 முதல் 27 வரையுள்ள வாரங்களில் உங்கள் உடலினுள் உங்களது குழந்தையின் விருத்திகள் மற்றும் மாற்றங்கள் பற்றி இப்பொழுது பேசுவோம். இவ்வேளையில் உங்களுக்கு நெஞ்செரிவு அல்லது வயிற்றினுள் எரிவேற்படுவது போன்ற உணர்வு ஏற்படலாம். வளர்ச்சியடைந்துவரும் உங்களது கருப்பை மேல்நோக்கி நகர்ந்து உங்களது வயிற்றினையும் சிறுகுடல்களையும் நெருக்கும் காரணத்தினாலேயே இவ்வாறான எரிவு ஏற்படுகின்றது. இதனால் ஏற்படும் அழுத்தம் வயிற்றில் மேலதிக அமிலச் சுரப்பினை உணரவைக்கின்றது. கருவுற்றிருப்பதனால் ஏற்படும் ஓர்மோன்கள் உங்களது உணவுக் குளாயிலும் வயிற்றுப்பாகத் தசைநார்களிலும் உள்ளதாலும் இவ்வாறு ஏற்படலாம். இதன்விளைவாக நீங்கள் உணவு உட்கொள்வது கடினமாக இருக்கலாம். இது வழமையானதொரு செயற்பாடாகும். உணவினைச் சிறிய அளவுகளில் ஒழுங்கான நேர இடைவெளிகளில் உண்பதால் இதனைக் குறைத்துக் கொள்ளலாம். அசெளகரியத்தைக் குறைப்பதற்கு நீங்கள் குறைந்தளவு காரச்சுவைப் பொருட்கள் (மிளகாய் மற்றும் பிற காரச்சுவைப் பொருட்களின் அளவினைக் குறைத்தல்) மற்றும் குறைந்தளவு எண்ணெய் பொருட்களைக் கொண்ட உணவுகளை உட்கொள்ள முயற்சிக்கலாம். இரவுநேரத்தில் உங்களுக்கு நெஞ்செரிவு ஏற்பட்டு தூங்குவதற்குக் கடினமாக இருப்பின் கட்டிலின்மேல் தலையணைகள் சிலவற்றைவைத்து அதன்மேல் தூங்க முயற்சிக்கலாம். இவ்வேளையில் பருத்துவரும் உங்களது உடலுடன் இணைந்து உங்களது சருமமும் விரிவடைவதனால் உங்களது வயிற்றுப்பாகம், தொடைகள் மற்றும் மார்பகங்களில் விரிவடைந்ததற்கான அடையாளங்கள் தோன்ற ஆரம்பிக்கும். இவற்றைக் குறைப்பதற்கென பலவிதமான வெளிப்புச்சுக்கள் வெளிச்சந்தைகளில் இருப்பினும் உண்மையில் இவற்றினாற் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏதுமேற்படுவதில்லை. இவற்றால் அதிகம் கவலைகொள்ள வேண்டாம், உங்களது உடலானது ஒரு குழந்தையைச் சுமந்திருப்பதற்கான அடையாளங்கள் இவையென எண்ணிப் பெருமிதம் கொள்ளுங்கள்.

இவ்வேளையில் சில தாய்மார்களுக்கு புடைநாளம் (varicose veins) ஏற்படக்கூடும். கருப்பை அதிக எடையுள்ளதாகி இரத்த நாடிகளில் அதிகளவு அழுத்தத்தை ஏற்படுத்தும்பொழுது இவ்வாறு நடைபெறுகிறது. இது அதிகளவு ஏற்படுகின்றதாயின் நீங்கள் மருத்துவ உதவியினை நாடவேண்டும். இது சிறிதளவு ஏற்படுகின்றதாயின் இயலுமான வேளைகளில் உங்களது பாதங்களை உயர்த்தி வைத்திருக்கவும். உதாரணமாக நீங்கள் தூங்கும்போது உங்களது பாதங்களை ஒரு தலையணைமேல் உயர்த்தி வைத்துக் கொள்ளலாம்.

இவ்வேளையில் உங்களது கணுக்கால்கள் வீக்கமடைவது வழமையானதொரு நிகழ்வாகும். உங்களது முகம், விரல்கள் அல்லது கைகள் பெரிதும் வீக்கமடைந்திருத்தல், போன்றவற்றை அவதானித்தால் அல்லது நீங்கள் தூங்கி எழுந்தவுடன் இவைகள் வீக்கமடைந்திருத்தலை அவதானித்தால் நீங்கள் மருத்துவ உதவியினை நாடவேண்டும் ஏனெனில் இவைகள் உயர் இரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகளாக இருக்கலாம்.

நாம் இப்பொழுது குழந்தையின் நிலையைப் பார்ப்போம். 26வது வாரத்தில் உங்களது குழந்தை ஏறத்தாழ 750 கிராம் எடையுள்ளதாக இருக்கும். அதனது சுவாசப்பைகள் இப்பொழுது உருவாகியிருக்கும். உங்களது வயிற்றினுள் குழந்தை தனது காலால் பலமாக உதைக்கலாம். உங்களது பங்காளர் உங்களது வயிற்றில் காது வைத்துக் கேட்டால் அவர் ஒன்றிரண்டு உதைகளை உணரக்கூடும். உங்களது குழந்தை இப்போது ஒளியினை உணரக்கூடிய நிலையில் உள்ளதால், உங்களது வயிற்றில் பிரகாசமான ஒளி பாச்சப்படும்போது, குழந்தை வேறுதிசையை நோக்கும் என்பது பரிசோதனைகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. குழந்தை இப்போது தன்னைச் சுற்றியுள்ளவற்றினைப் பற்றி எந்தளவு அவதானமாக உள்ளது என்பதனை இது புலப்படுத்துகிறது. 27வது வாரத்தில் உங்களது குழந்தை ஏறத்தாழ 1 கிலோ எடையுள்ளதாக இருக்கும்.