week-19

week-20

உங்களது குழந்தை சுவாசிக்கும் அறிகுறிகள் தென்படும். ஆயினும் அதனது சுவாசப்பைகள் இன்னமும் முழுமையாக விருத்தியாகியிராது. உங்களது குழந்தை பிறந்தபின்னர் அது காற்றினைச் சுவாசிப்பதற்குப் போதுமான அளவிற்கு சுவாசப்பைகள் மேலும் வளரவேண்டும். 20வது வாரத்தின்போது நீங்கள் கருவுற்று 5ம் மாதத்தில் உள்ளீர்கள். உங்களது கருப்பை இப்பொழுது உங்களது தொப்புளிலிருந்து ஏறத்தாழ 2 செ.மீ கிழே அமைந்துள்ளது. இதன்பின்னர் உங்களது கருப்பை வாரந்தோறும் ஏறத்தாழ 1 செ.மீ அளவு விரிவடையும். அதேவேளை உங்களது உடலினுள்ளே முக்கியமான மாற்றங்கள் ஏற்படுகின்றன. உங்களது குழந்தை பிறந்தபின் அதற்குப் போசாக்கு கிடைப்பதற்கான அதிமுக்கியமான மூலவளம் தாய்ப்பாலாகும். இப்பொழுது உங்களது உடலும் மார்பகங்களும் தாய்ப்பாலைச் சுரப்பதற்கு ஆயத்தமாகின்றன. குழந்தை பிறந்தபின் சுரக்கப்படுகின்ற விலைமதிப்பற்றதும் உயர்போசாக்கு நிறைந்ததுமான முதற்பாலானது, – இது சீம்பால் (Colostrum) எனவும் அழைக்கப்படுகிறது – உங்களது மார்பகங்களினுள் உருவாக ஆரம்பித்துள்ளது. அரியோலா (Areola) என அழைக்கப்படும் முலைக்காம்புத் தோல் (முலைக்காம்பினைச் சுற்றியுள்ள கருமையான பகுதி) படிப்படியாக விரிவடைகின்றது. இவையாவும் குழந்தை பிறந்தபின் அதற்கு ஊட்டமளிப்பதற்கு உங்களது மார்பங்கள் தயாராவதனை உணர்துகின்ற குறிகளாகும். உங்களது குழந்தை பிறந்து ஏறத்தாழ ஒரு வருடகாலத்தின்பின் பொதுவாக முலைக்காம்புத் தோல் மீண்டும் வழக்கமான அளவுக்கு மாற்றமடையும்.

இக்காலகட்டத்தில் ஓமோன் சுரப்புகள் காரணமாக உடலில் மாத்திரமல்ல உங்களது உணர்வுகளிலும் மாற்றங்கள் ஏற்படுவதனை நீங்கள் அவதானிக்கக்கூடும். உதாரணமாக வழக்கத்தைவிடவும் அதிகமாக எரிச்சல் அல்லது மறதி ஏற்படுவதுடன், ஒரு வேலையில் நீண்ட நேரம் புலன்செலுத்தி அதனைச் செய்து முடிப்பதும் கடினமாகவிருக்கும். இது வழமையானதொரு செயற்பாடாகும். உங்களது பங்காளரும் மற்றும் குடும்ப உறுப்பினர்களும் இவையாவும் உங்களது கருத்தரித்திருத்தல் தொடர்பான ஓமோன் மாற்றங்களினால் ஏற்படுகின்றன என்பதனைப் புரிந்துகொள்ளுதல் இங்கு முக்கியமானதாகும். கருவுற்றிருக்கும் காலத்தில் இம்மாற்றங்களிற்கு உட்படும்போது அவர்களது புரிந்துணர்வும் ஆதரவும் உங்களுக்கு அவசியம் என்பதனை அவர்களுடன் கலந்துரையாடிப் புரியவைக்கவும்.

error: Content Protected © mummypages.lk