Home > Tamil > உங்கள் குழந்தையின் பாற்பற்களைப் பாதுகாப்பதற்கு இன்றே நடவடிக்கை எடுங்கள்!

உங்கள் குழந்தையின் பாற்பற்களைப் பாதுகாப்பதற்கு இன்றே நடவடிக்கை எடுங்கள்!

ஒவ்வொரு வருடமும்  மார்ச் மாதம் நாம் வாய்நல சுகாதார தினத்தை கொண்டாடுகிறோம். சாப்பிடுதல், கதைத்தல், புன்னகை செய்தல் மற்றும் பாடுதல் போன்ற அடிப்படைச் செயற்பாடுகளைச் செய்வதற்கு நாம் வாய்ச் சுகாதாரத்தைப் பேணுதல் மிகவும் அவசியமாகின்றது. போதுமான வாய்ச் சுகாதாரம் பேணப்படாமை காரணமாக உலகில் 90% வீதமான மக்கள் பலவிதமான வாய் நோய்களுக்கு ஆளாகின்றனர். இலங்கையின் புகழ் பெற்ற வாய் சிகிச்சை நிபுணர் டாக்டர் ஷீவானி பீ விஜயரத்ன தாய்மார்களை தங்கள் குழந்தைகளின் வாய்ச் சுகாதாரத்தைப் பேணுமாறு அழைப்பினை விடுக்கின்றார். ஏன் வாய்ச் சுகாதாரம் பேணப்படுதல் அவசியம் என்பதனையும், தாய்மார்கள் எவ்வாறு தங்கள் குழந்தைகள் ஆரோக்கியமான பற்களுடன் வளர்வதை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதனையும் இங்கே விளக்கிக் கூறுகின்றார்.

கர்ப்பத்தில் இருந்தே ஆரம்பமாகிறது

குழந்தைகள் உங்களின் கருவறைக்குள் இருந்தே வளர்ச்சியடையத் தொடங்குகின்றன. சிசுக்கள் அதன் வளர்ச்சிக்குத் தேவையான எல்லா ஊட்டச் சத்துகளையும் உங்களிடமிருந்தே பெறுகின்றன. பொதுவாகவே குழந்தைகள் பிறக்கும் நேரத்தில் அவர்களுக்குப் பற்கள் காணப்படமாட்டாது. ஆயினும் பற்கள் உருவாவதற்கான ஆரம்பக் கட்டச் செயற்பாடுகள் கருவறையில் இருக்கும்போதே ஆரம்பமாகிறன. எனவே குழந்தைக்கு பிற்காலத்தில்  ஆரோக்கியமான பற்கள் மற்றும் எலும்புகள் என்பன வளர்வதற்கு நிறை உணவை உண்ணுதல், விட்டமின்கள், கனியுப்புகள் என்பவற்றைச் சேர்த்துக் கொள்ளுதல் என்பன கர்ப்பக் காலத்தில் முக்கியமானதாகும். அதனால் உங்களுடைய குழந்தைகளுக்குப் போதுமான ஊட்டச் சத்துக்கள் கிடைக்கின்றன.  உங்களின் கர்ப்பக் காலத்தின் போது உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தில் ஏற்படும் அபிவிருத்தியானது குழந்தைகளின் ஆரோக்கியமான பல் வளர்ச்சிக்கும் எலும்புகளின் வளர்ச்சிக்கும் ஒரு அடித்தளமாக அமைகின்றது.

உங்கள் குழந்தைகளின் முதலாவது பற்கள்.

பொதுவாக குழந்தைகளிடம் முதலில் முளைக்கின்ற பற்களைப் பாற்பற்கள் என அழைக்கிறார்கள். இப் பாற்பற்கள் குழந்தைகள் கிட்டதட்ட 6-12 மாத வயதாகும் போது முளைக்க ஆரம்பிக்கின்றன. சில குழந்தைகளுக்கு அவை அவ்வயதிற்கு  முன்பதாகவே வளர்ச்சி அடைகின்றது. சில குழந்தைகளுக்குச் சற்றுத் தாமதமாகலாம். குழந்தைகளுக்குப் பொதுவாக அவர்களது கீழ் முன் வரிசைப் பற்களே முதலில் வளரத் தொடங்குகின்றன. அதனைத்  தொடர்ந்து மேல் முன் வரிசைப் பற்கள் வளர்ச்சி அடைகின்றன. குழந்தைகள் இரண்டரை தொடக்கம் மூன்று வயதாகின்ற போது கிட்டத்தட்ட இருபது பற்கள் வரை  வளர்ந்து காணப்படும். குழந்தைகளின் பற்கள் வளர்ந்தவர்களின் பற்களை விட வெண்மையானவை. அதனாலயே அவை பாற்பற்கள் என பொதுவாக அழைக்கப்படுகின்றது. ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளுக்குப் பற்கள் வேகமாக வளர்கின்றன.

குழந்தைகளின் பாற்பற்கள் உருவாகின்ற போது காய்ச்சலோ வயிற்றோட்டமோ ஏற்படும் என்று ஒரு பொதுவான நம்பிக்கை உண்டு. ஆனால் அதற்குச் சரியான விஞ்ஞான விளக்கங்கள் இது வரை கண்டறியப்படவில்லை. எனினும் அது தொடர்பான நம்பிக்கைகள் தொடர்ந்தும் உள்ளன. இருந்த போதும் எமது பாட்டிமார்கள் முன்னைய காலத்தில் பல் ஈறுகளில் தேனைத் தடவுவதை நாங்கள்  பார்த்திருக்கிறோம். இது பல் ஈறுகளை மென்மையாக்கவும் பற்கள் இலகுவாக ஈறுகளில் இருந்து வெளி வருவதற்கும் வலியைக் குறைப்பதற்கும் இதைச் செய்வார்கள். இதற்குச் சரியான விஞ்ஞான ரீதியான காரணம் யாது என இன்னமும்  கண்டறியப்படவில்லை. எனினும் பல் ஈறுகளை மென்மைபடுத்தக்கூடியதும், வீக்கங்களையோ வலியையோ கட்டுப்படுத்தக் கூடிய மருந்துகளோ கிரீம்களோ இதுவரை கண்டறியபடவில்லை. இது ஒரு  தன்னிச்சையான உயிரியல் சார் செயற்பாடாகும்.

உங்களது குழந்தைகளின் பாற்பற்களை பாதுகாக்கவும்.

குழந்தைகளின் ஆரம்ப பாற்பற்கள் தற்காலிகமானது என்பதாலும் அவை விரைவில் விழுந்து விடும் என்பதாலும் பெரும்பாலான தாய்மார்கள் அதைப்பற்றி அதிகம் கவனம் செலுத்துவது இல்லை என டாக்டர் விஜயரத்ன கூறுகிறார். பாற்பற்களை ஆரோக்கியமாகக் கவனிக்க வேண்டும். ஏனெனில்  பாற்பற்கள் வளர்கின்ற வேரிலேயே மற்ற பற்களும் முளைக்கின்றன. பாற்பற்கள் ஒழுங்காக அமையாவிடின் நிரந்தரமான பற்களும் பலவீனமான நிலையை அடையும். இப்படி பற்கள் ஒழுங்கீனமாக காணப்படுமானால் பற்கள் சிதைந்து போக வாய்புக்கள் உண்டு. எனவே பாற்பற்களை கவனமாகப் பராமரிப்பது மிகவும் அவசியமானதாகும். ஆகவே குழந்தையின் பாற்பற்கள் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

தாய்மார்கள் செய்யகூடியது யாது?

குழந்தைகளின் பற் சிதைவுகளைத் தடுப்பதற்கு தாய்மார்கள் எடுக்கவேண்டிய சில முக்கியமான நடவடிக்கைகள் பற்றி டாக்டர் ஷிவானி விஜயரத்ன குறிப்பிடுகின்றார்.

  • குழந்தைகளுக்கு இரவில் அடிக்கடி பாலுட்டுவதைக் குறைத்துக் கொள்ளுங்கள். அவ்வாறு இரவு நேரத்தில் குழந்தைகளுக்கு பாலுட்டுவதாயிருந்தால் பாலுட்டிய பின்னர் குழந்தையின் பல் ஈறுகளை சிறு பஞ்சினைக் கொண்டு அல்லது தூய்மையான பருத்தித் துணியினை இளம் சூடான நீரில் நனைத்து பல் ஈறுகளை துடைத்து எடுங்கள். இப்படிச் செய்வதனால் குழந்தைகளது பற்களை பட்டீரியாக்களின் தாக்கங்களில் இருந்து பாதுகாக்கலாம். அத்துடன் ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவும்.
  • உங்கள் குழந்தைகளுக்கு இனிப்புப் பண்டங்களைக் கொடுப்பதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். அதாவது சொக்கிலேட், டொபீ, பிஸ்கட் போன்றன. இனிப்புக்குப் பதிலாக பழங்களைக் கொடுங்கள்.
  • தினமும் உங்கள் குழந்தைகளின் பற்களில் ஏதேனும் துவாரங்கள் பூச்சிகள் உள்ளனவா எனப் பாருங்கள். ஒரு சிறிய புள்ளியாகக் கூட பூச்சி காணப்படின் உங்கள் பல் மருத்துவரை நாடுங்கள். இதன் மூலம் பூச்சி மற்றப் பற்களுக்கும் பரவுவதைக் கட்டுப்படுத்தலாம்.
  • பல் துலக்கப் பண்ணுங்கள்: உங்கள் குழந்தையின் பற்கள் ஒரு நாளைக்கு இரண்டு தடவையேனும் துலக்கப்படுகின்றதா எனப் பாருங்கள். மென்மையான தூரிகையைப் பயன்படுத்துங்கள். மென்மையான பற்பசையை சிறிதளவில் பயன்படுத்துங்கள். புளோரைட் அடங்கிய பற்பசையை குழந்தை விழுங்காத வண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள்.
  • பற்கரைகள் ஏற்படுகின்றதா எனப் பாருங்கள். இது பற்கள் சரியாக துலக்கப்படாத போது சிறிது மஞ்சள் நிறத்தில் தோன்றக் கூடிய ஒரு கறையாகும். இவை நீண்ட காலங்களுக்குக் காணப்படும் போது பற்துளைகளையும் பூச்சியையும் உண்டாக்கும். எனவேதான் உங்கள் குழந்தைகளின் பற்களை ஒரு நாளைக்கு இரு தடவைகள் தூய்மைப்படுத்த வேண்டும்.

உங்கள் பிள்ளைகளின் நிரந்தரப் பற்கள்

குழந்தைகள் 6 வயதை அடையும் போது அவர்களது நிரந்தரப் பற்கள் வளர ஆரம்பிக்கும். பொதுவாக பாற்பற்கள் விழுந்த இடத்திலேயே மற்றைய பல் வளரத் தொடங்கும். 12 வயதை அடையும் போது குழந்தைக்கு எல்லாப் பற்களும் முளைத்து விட்டிருக்கும்.

பாற்பற்களுக்கிடையேயான இடைவெளிகள்:

பொதுவாக குழந்தைகளின் பாற்பற்களுக்கு இடையே இடைவெளிகள் காணப்படும். இதற்கான காரணம் நிரந்தரப் பற்கள் பாற்பற்களை விட பெரிதாகக் காணப்படும்.  ஆகவே நிரந்தரப் பற்கள் முளைப்பதற்குப் போதுமான  இடைவெளி தேவையான வகையில் பாற்பற்கள் இடைவெளி விட்டு முளைக்கும். எனவே சில தாய்மார்கள் தங்களது பிள்ளைகளது பாற்பற்களுக்கு இடையே இடைவெளி காணப்படுகின்றது எனக் கவலைப்படத் தேவையில்லை.

இரட்டைப் பற்கள் உருவாகுதல்:

சிலவேளைகளில் உங்கள் குழந்தைகளது வாயில் இரட்டைப் பற்கள் தோன்றக் கூடும். இதற்குக் காரணம் பாற்பற்கள் உரிய காலத்தில் விழாத போதும், அந்த இடத்தில நிரந்தர பற்கள் முளைக்க ஆரம்பிப்பதாகும். அவ்வாறான நேரங்களில் நிரந்தரப் பற்கள் பாற்பற்களின் பின்புறமாகத் தோன்றும். இந்த சந்தர்பங்களில் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை ஒரு பல் வைத்திய நிபுணரிடம் காட்ட வேண்டும். அத்துடன் அவ்விடத்தில் உள்ள பாற்பற்களை அகற்றி நிரந்தரப் பற்கள் அவ்விடத்தில் வளர வழி செய்ய வேண்டும்.

ஒரு தாய் என்ற வகையில் உங்கள் குழந்தைக்கு வளமான பற்களை கொடுக்கக்கூடியவர் நீங்களேயாகும்.  கர்ப்பமுற்றிருந்த காலம் தொடக்கம் உங்கள் குழந்தைக்கான ஆரோக்கியமான பற்களுக்கு நீங்கள் தான் பொறுப்பு. இதற்காக மேற்கூறிய ஆலோசனைகளைப் பின்பற்றுவீர்கள் என நம்புகிறோம். இன்றே உங்கள் குழந்தைகளின் பற்சுகாதாரத்தை ஆரம்பியுங்கள்.

மருத்துவ நிபந்தனைகள்:

mummypages.lk ஒரு மருத்துவ நிபுணரோ, ஒரு மருத்துவரோ அல்லது ஒரு MD யோ அல்ல. இந்த இணையத் தளத்தில் வழங்கப்படும் தகவல்கள் ஒரு பொதுவான மருத்துவ ஆலோசனைகளேயன்றி அதனை ஒரு நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவ ஆலோசனைகளுக்கான ஒரு மாற்றீடாகக் கருதக் கூடாது. இவ்விணையத் தளத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களை ஒரு மருத்துவ அல்லது ஆரோக்கிய நிலைமைகளுக்கான ஒரு சிகிச்சையாகவோ அல்லது நோய்களைக் கண்டறியுமொரு வழிமுறையாகவோ கருதக் கூடாது. உங்களுக்கு ஒரு நோய் ஏற்பட்டுள்ளது அல்லது ஏற்பட்டு இருக்கலாம் என நீங்கள் சந்தேகித்தால் உடனடியாக நீங்கள் உங்கள் மருத்துவரை நாடுதல் வேண்டும் .

Important!
mummypages.lk is not a doctor or a specialist and this site gives only general information’s, there for if you feel any sort of discomfort or illness please consult your doctor immediately for assistance.